பினாங்கு விமான நிலையம் மற்றும் ஜெலுத்தோங்கில் அதிரடி: RM 4.25 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல், 4 பேர் கைது
மலேசியாவின் பினாங்கு சர்வதேச விமான நிலையம் மற்றும் ஜெலுத்தோங் பகுதிகளில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனைகளில் லண்டனுக்கு கடத்தப்படவிருந்த பல மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சீனப் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவின் பினாங்கு சர்வதேச விமான நிலையத்தில் (PIA), லண்டனுக்கு கடத்தப்படவிருந்த RM 3.2 மில்லியன் (RM3.2 million) மதிப்பிலான 40 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில், சரவாக் மாநிலத்தின் மிரி பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் அக்டோபர் 18 அன்று விமான நிலைய காத்திருப்பு அறையில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரது பயணப்பெட்டிகளை சோதனை செய்தபோது இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக பினாங்கு காவல் துறைத் தலைவர் டத்தோ டென்னிஸ் லிம் குவாங் கெங் தெரிவித்தார்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் ஆர்.எம் 9,000 கூலி பெற்றுக்கொண்டு போதைப்பொருள் கடத்தும் ‘கூரியராக’ செயல்பட்டது தெரியவந்துள்ளது. அவர் லண்டனுக்கு போதைப்பொருளை கடத்துவது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது. மேலும், வேலைவாய்ப்பில்லாத அந்த இளைஞருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் போதைப்பொருட்களை பயன்படுத்தியதும், அவர் மீது ஏற்கனவே இரண்டு குற்றப் பதிவுகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
இதற்கிடையே, மற்றொரு வழக்காக ஜெலுத்தோங் (Jelutong) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஆர்.எம் 1.05 மில்லியன் மதிப்பிலான பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையின்போது, லிஃப்ட் அருகே 1.3 கிராம் கெட்டமைன் வைத்திருந்த 26 வயது உள்ளூர் இளைஞர் முதலில் பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து, அடுக்குமாடி குடியிருப்பின் 10வது தளத்தில், போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 40 வயது சீன நாட்டுப் பெண் ஒருவரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
அந்த குடியிருப்பில் நடந்த சோதனையில் 7 கிலோ எம்.டி.எம்.ஏ (MDMA) தூள், எருமின்-5 மாத்திரைகள், கெட்டமைன் மற்றும் திரவ மெத்தம்பேட்டமைன் ஆகியவை சிக்கின. எம்.டி.எம்.ஏ-வை சிறிய பொட்டலங்களாக மாற்றி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொறுப்பை அந்த சீனப்பெண் செய்து வந்ததும், அவரிடம் போதைப்பொருள் வாங்க வந்த 44 வயது உள்ளூர் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட அனைவரும் 1952 அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் 39B பிரிவின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

0 Comments
No comments yet. Be the first to comment.