"உங்கள் சேவையை மறக்க முடியாது!" - தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு RM 30,000 அள்ளிக்கொடுத்த அமைச்சர் கோபிந்த் சிங் டியோ!
பத்துமலை ஷங்கா மண்டபத்தில் நடைபெற்ற மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான தீபாவளி பெருநாளை டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து, சங்கத்திற்கு RM 30,000 மானியம் வழங்கி சிறப்பித்தார்.
மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான தீபாவளி திருநாள் கொண்டாட்டம் பத்துமலையில் (Batu Caves) உள்ள ஷங்கா மாநாட்டு மண்டபத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த மாபெரும் விழாவிற்கு டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.சமூகத்தின் கண்களாகச் செயல்படும் பத்திரிகையாளர்களைக் கௌரவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, சமுதாய மேம்பாட்டிற்குப் பத்திரிகையாளர்கள் ஆற்றிவரும் அரும்பணியை வெகுவாகப் பாராட்டினார்.அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மக்களுக்கு உடனுக்குடன் உண்மையான தகவல்களைக் கொண்டு சேர்க்கும் ஆற்றல் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே உண்டு என்று புகழ்ந்துரைத்த அவர், அவர்களின் சேவையை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது என்றார்.மேலும், மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், தனது சொந்த நன்கொடையாக 30,000 ரிங்கிட் (RM 30,000) மானியம் வழங்குவதாகவும் அவர் பெருமிதத்துடன் அறிவித்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய சங்கத்தின் தலைவர் செ.வே.முத்தமிழ் மன்னன், ஊடகவியலாளர்களின் நலன் காக்க சங்கம் முன்னெடுத்து வரும் முயற்சிகளைப் பகிர்ந்து கொண்டார்.சங்கம் ஆண்டுதோறும் தனது உறுப்பினர்களுக்காக இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தைச் சிறப்பாக நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், நடப்பாண்டிலும் உறுப்பினர்களுக்குச் சிறப்புத் தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். அதோடு, விழாவிற்குத் தேவையான தீபாவளி உணவுப் பொருட்களை வழங்கிச் சிறப்பான ஆதரவை அளித்த ‘லிட்டில் பிரதர்ஸ்’ (Little Brothers) குழுவினருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
பத்திரிகையாளர்களைக் கொண்டாடும் இந்தச் சிறப்புமிக்க தீபாவளி விருந்து நிகழ்ச்சியில், பல்வேறு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவரின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த விழா, மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர்களிடையே உள்ள ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் ஒரு சிறந்த முன்னெடுப்பாக அமைந்தது.

0 Comments
No comments yet. Be the first to comment.