மலேசியாவின் பவளப்பாறைகளில் மைக்ரோபிளாஸ்டிக் மாசு: பாதுகாக்கப்பட்ட பகுதியிலும் தொடரும் பேரபாயம்!
மலேசியாவின் பாதுகாக்கப்பட்ட கடல் பகுதியான புலாவ் ரெடாங் பூங்காவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு (64%) பவளப்பாறைகளில் ஆபத்தான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் படிந்துள்ளதாக புதிய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியாவின் தென் சீனக் கடலில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியான புலாவ் ரெடாங் கடல் பூங்காவில் உள்ள பவளப்பாறைகளில் பெருமளவு மைக்ரோபிளாஸ்டிக் (5 மில்லிமீட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் துகள்கள்) கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 'ரீஜினல் ஸ்டடீஸ் இன் மரைன் சயின்ஸ்' என்ற ஆய்விதழில் வெளியான இந்த முடிவுகளின்படி, மலேசியாவின் தெரெங்கானு பல்கலைக்கழக (UMT) ஆராய்ச்சியாளர்கள் சேகரித்த 200 பவளப்பாறை துண்டுகளில் சுமார் 64 சதவீதம் மைக்ரோபிளாஸ்டிக் துகள்களால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடலின் அடிப்பகுதியில் எங்கும் நகரமுடியாமல் இருக்கும் பவளப்பாறைகளில் இவ்வளவு சுலபமாக பிளாஸ்டிக் துகள்கள் நுழைந்தது தங்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்ததாக முன்னணி ஆய்வாளர் ஓங் சாய் கீ தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்விற்காக அக்ரோபோரா மற்றும் போரைட்ஸ் ஆகிய இருவகை பவளப்பாறைகள் மாதிரி எடுக்கப்பட்டு, 5 சதவீத ஹைட்ரோகுளோரிக் அமிலம் மூலம் பரிசோதிக்கப்பட்டன. இதில் அதிகப்படியாக பி.இ.டி (PET) எனப்படும் பாட்டில்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் துகள்களும், நீர் விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் கருப்பு நிற பிளாஸ்டிக் துகள்களும் கண்டறியப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் குப்பைகளில் சிக்கிக்கொண்ட பவளப்பாறைகளில், மற்றவற்றை விட மூன்று மடங்கு அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் அதன் எலும்புக்கூடுகளில் படிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களான லாங் பீச் போன்ற பகுதிகளில் பவளப்பாறைகளில் ஒரு கிராமுக்கு 1.31 மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் என்ற அளவில் அதிக மாசு பதிவாகியுள்ளது. அதேசமயம், ஆமைகள் முட்டையிடும் அமைதியான பகுதியான சாகர் ஹுடாங்கில் இதன் அளவு 0.54 ஆக குறைந்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கைகளே இந்த மாசிற்கு முக்கிய காரணம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இந்த பிளாஸ்டிக் துகள்களால் பவளப்பாறைகளின் கட்டமைப்பு விரைவாக சிதைவடையும் அபாயம் உள்ளதாக முந்தைய ஆய்வுகள் எச்சரித்துள்ளன.
இந்த நிலை குறித்து எச்சரித்துள்ள இந்தோனேசிய கடல்சார் விஞ்ஞானி முஹம்மது ரெசா கார்டோவா, பவளப்பாறைகளை பாதுகாக்க மீன்பிடி தடைகள் மற்றும் சுற்றுலா கட்டுப்பாடுகளை மட்டும் நம்பியிருக்க முடியாது என்று கூறுகிறார். பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் நுழைவதை ஆரம்பத்திலேயே தடுப்பது மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகள் என்ற எல்லைக் கோடுகளால், கடல் நீரோட்டங்கள் மூலம் அடித்து வரப்படும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை தடுத்து நிறுத்த முடியாது என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.