பிரிக்பீல்ட்ஸில் மைக்கி ஏற்பாட்டில் மாபெரும் தீபாவளி கொண்டாட்டம்: பிரதமர் அன்வார் பங்கேற்பு!
கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் மைக்கி அமைப்பின் ஏற்பாட்டில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள மாபெரும் தீபாவளி பொது உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு வருகை புரியவுள்ளார்.
மலேசிய இந்திய வர்த்தக தொழில் சம்மேளனம் (மைக்கி), பிரதமர் துறை மற்றும் ஒற்றுமை அமைச்சின் ஆதரவுடன் கோலாலம்பூரில் மாபெரும் தீபாவளி பொது உபசரிப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி சனிக்கிழமையன்று இந்த உற்சாகமான கொண்டாட்டம் நடைபெறவுள்ளது என மைக்கி தலைவர் டத்தோ என். கோபாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை இந்த நிகழ்ச்சி களைக்கட்டவுள்ளது.
இந்த மாபெரும் தீபாவளி திறந்தவெளி உபசரிப்பில் நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். நாட்டின் பல்லின மக்கள், தலைவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணையவுள்ள இந்நிகழ்வில், சுமார் 5,000 பேர் வரை திரளாகப் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, கூட்டரசுப் பிரதேசங்களைச் சேர்ந்த 14 தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள் இந்த உபசரிப்பில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். மேலும், வருகையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, வாகனங்களை நிறுத்துவதற்குச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மைக்கி செயலாளர் டத்தோ ஏ.டி. குமாரராஜா தெரிவித்துள்ளார். எனவே, இந்திய சமுதாயத்தினர் திரளாகக் கலந்து கொண்டு இந்த தீபாவளி பொது உபசரிப்பைச் சிறப்பிக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.