TBC News Malaysia

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

நஜிப் பொதுமன்னிப்பு விவகாரம்: ஜாஹிட்டை விமர்சிப்பது கேலிக்கூத்து – விக்னேஸ்வரன் சாடல்

Share This Article:

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் மாமன்னருக்கு மட்டுமே உரியது. இந்த முடிவிற்காக அம்னோ மற்றும் அதன் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடியை விமர்சிப்பது நியாயமற்ற அரசியல் கேலிக்கூத்து என ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நஜிப் பொதுமன்னிப்பு விவகாரம்: ஜாஹிட்டை விமர்சிப்பது கேலிக்கூத்து – விக்னேஸ்வரன் சாடல்

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் என்பது முழுமையாக மாமன்னரின் தனிப்பட்ட உரிமையாகும்.இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மாமன்னருக்கு மட்டுமே இருக்கும் நிலையில், அதற்காக அம்னோ மற்றும் அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடியைக் குறை கூறுவது ஏற்புடையதல்ல என்று ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நஜிப்பிற்கு ஆதரவாக அம்னோ நிற்பதால், பொதுமன்னிப்பு குறித்த முடிவை அவர்களே எடுத்தது போல விமர்சிப்பது முற்றிலும் ஓர் அரசியல் கேலிக்கூத்து என்றும் அவர் சாடினார்.

நஜிப் ரசாக்கின் நீண்டகால நண்பர் என்ற முறையிலும், கட்சியின் முன்னாள் தலைவர் என்ற அடிப்படையிலும் அவருக்கு ஆதரவாக நிற்க அஹ்மத் ஜாஹிட் ஹமிடிக்குக் காரணங்கள் உள்ளன. மனிதாபிமான அடிப்படையில் நஜிப்பிற்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என அம்னோவும் பாரிசான் நேசனல் (பி.என்) கூட்டணியும் குரல் கொடுப்பது அவர்களின் உரிமை. ஆனால், ஆதரவு தெரிவிக்கும் உரிமை இருப்பதால், பொது மன்னிப்போ அல்லது வீட்டுக் காவலோ வழங்கும் அதிகாரம் அம்னோ அல்லது ஜாஹிட் கையில் இருப்பதாக அர்த்தமாகாது என்பதை விமர்சகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

Content image

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தவொரு அரசியல் சலசலப்பும் இன்றி, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் ஒற்றுமை அரசாங்கத்திற்குப் பாரிசான் நேசனல் கூட்டணி தொடர்ந்து தனது ஆதரவை வழங்கி வருகிறது.அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு உறுதுணையாக இருக்கும் ஒரு கூட்டணிக் கட்சியை, அரச முடிவுக்கு உட்பட்ட ஒரு விவகாரத்திற்காகத் தேவையின்றி விமர்சிப்பது நியாயமற்றது.இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட தரப்பு ஜாஹிட் இல்லை என்பதால், அவர் மீது பழி சுமத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அரசியல் தலைவர்களுக்காகப் பொதுமன்னிப்பு கோருவது மலேசிய அரசியலில் புதிதல்ல என்பதையும் விக்னேஸ்வரன் இந்தத் தருணத்தில் நினைவூட்டினார்.2018-ஆம் ஆண்டு 14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்ற பிறகு, அன்வார் இப்ராஹிமுக்கு முழுமையான அரச மன்னிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பிகேஆர் (கெஅடிலான்) மற்றும் ஜசெக ஆகிய கட்சிகள் தீவிரமாகப் போராடின. அப்போது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் அன்வாரின் விடுதலைக்காக எவ்வாறு ஒன்றுபட்டு குரல் கொடுத்தார்களோ, அதே உணர்வில்தான் தற்போது அம்னோவும் நஜிப்பிற்காகக் குரல் கொடுக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions