போர் வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பினாங்கு - உலக நினைவு தின அனுசரிப்பு!!
உலக நினைவு தினத்தை முன்னிட்டு, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஜார்ஜ் டவுன், எஸ்பிளனேட் (Esplanade) பகுதியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் (Cenotaph) நடைபெற்றது.
பினாங்கு முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் (PVA) ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்வில், முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள், மலாயா அவசரகாலம் மற்றும் இந்தோனேசிய மோதல் ஆகியவற்றின்போது உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் நினைவுகூரப்பட்டனர். பொதுமக்கள், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அதிகாலை 7 மணி முதலே வருகை தந்து, மலர்வளையம் வைத்தும் மௌன அஞ்சலி செலுத்தியும் தங்கள் மரியாதையைச் செலுத்தினர்.
முதல்வர் sau கொன் இயோ
நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பினாங்கு மாநில முதல்வர் sau கொன் இயோ உரையாற்றுகையில், கடந்த 25 ஆண்டுகளாக இந்த நினைவு தின நிகழ்வைச் சிறப்பாக நடத்தி வரும் பினாங்கு முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தைப் பாராட்டினார்.
போர்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் தியாகத்திற்கு நம்மால் ஈடுசெய்ய முடியாது. அவர்களின் சேவையை நினைவுகூர்வதன் மூலமும், வாழும் முன்னாள் வீரர்களைப் பராமரிப்பதன் மூலமும், அவர்களின் வீர வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதன் மூலமுமே அவர்களுக்கு உண்மையான மரியாதை செலுத்த முடியும், என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மலேசிய ஆயுதப் படைகளின் முன்னாள் வீரர்கள் விவகாரத் துறையுடன் இணைந்து மாநில அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சங்கத் தலைவர் கென்னத் ஸ்பெல்டெவிண்டே உரை
முன்னதாக உரையாற்றிய பினாங்கு முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத் தலைவர் கென்னத் ஸ்பெல்டெவிண்டே, "இனம், மதம், நாடு கடந்து உயிர்த்தியாகம் செய்த பாதுகாப்புப் படையினரையும், போர்களில் பலியான அப்பாவிப் பொதுமக்களையும் இந்நாளில் நினைவுகூர்கிறோம். இளைய தலைமுறையினர் வரலாற்றிலிருந்து பாடம் கற்று, நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும்," என வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் பினாங்கு சுற்றுலா மற்றும் ஆக்கப்பூர்வப் பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹோன் வாய், மலேசியாவிற்கான பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் (பொறுப்பு) ருசினா ஹாசன் மற்றும் நேபாளத் தூதரக முதல் செயலாளர் சுஷில் கிமிரே, பினாங்கு டத்தோ மரியதாஸ் கோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.