டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை நியமிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், தற்போதைய நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
முக்கிய அரசுப் பொறுப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பதிலாக வேறு மாநிலத்தைச் சேர்ந்த நபர் நியமிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது என்றும், இந்த முடிவை கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது பொருத்தமற்றது என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.
தமிழ்மொழியை அறியாத ஒருவரை இந்தப் பொறுப்பில் அமர்த்துவது தமிழர்களுக்கு அவமரியாதை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, வெங்கட் நாராயணாவை டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்து உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை அந்தப் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என தமிழக அரசை சீமான் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.