புக்கிட் குளுகூர் இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு வித்திடும் 'மடானி சமூக நிகழ்ச்சி - ரிம 25,000 கல்வி உதவித்தொகை!
புக்கிட் குளுகூரில் நடைபெற்ற ‘மடானி’ சமூக நிகழ்ச்சியின் மூலம் இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் ரிம 25,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
புக்கிட் குளுகூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் எதிர்கால வாய்ப்புகளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டு வரும் 'மடானி மக்கள் இந்திய சமூக நிகழ்ச்சி' (Program MADANI Rakyat Komuniti India) வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு மிகச்சிறந்த எழுச்சியுடன் இடம்பெற்றது.கல்வி, வேலைவாய்ப்புப் பாதைகள் மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரண்டாம் நாள் நிகழ்வு, அப்பகுதி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாபெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.
மதிப்புமிக்க வழிகாட்டுதல்கள்
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் உயர் கல்வி நிறுவனங்களின் சேர்க்கை, சரியான தொழில் துறைகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி, மற்றும் பி.டி.பி.டி.என் (PTPTN) கல்விக்கடன் தொடர்பான முறையான நடைமுறைகள் மற்றும் மதிப்புமிக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
இவ்வாலோசனைகள் இளம் தலைமுறையினர் தங்களது உயர்கல்விப் பயணத்தைத் திட்டமிட பெரிதும் உதவியாக இருந்தன.
கல்வி உதவித்தொகை வழங்கி ஊக்கமளிப்பு செய்யப்பட நிலையில் இந்நிகழ்ச்சியின் மிக முக்கியக் நிகழ்வாக, மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையிலும் தகுதியான 50 மாணவர்களுக்குத் தலா ரிம 500 வீதம் மொத்தம் ரிம 25,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
இந்த உதவித்தொகை மாணவர்களின் கல்வி ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.
எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு வாழ்த்துகள்
விரைவில் எஸ்பிஎம் (SPM) மற்றும் எஸ்டிபிஎம் (STPM) தேசியத் தேர்வுகளை எதிர்நோக்கவுள்ள அனைத்து மாணவச் செல்வங்களையும் பாராட்டி வாழ்த்திய மாண்புமிகு ராம் கர்பால், உங்களது கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நிச்சயம் சிறந்த பலன்களைத் தந்து, உங்களது ஒளிமயமான எதிர்காட்டிற்கான உறுதியான பாதையை அமைக்கும் எனத் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், மாணவர்கள் எத்தகைய அச்சமுமின்றி, நம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்தியச் சமூகத்தின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பல ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளைச் செய்து வரும் மித்ரா (MITRA) அமைப்புக்கும், இந்நிகழ்ச்சியின் பங்காளிகளுக்கும் மற்றும் இந்த முயற்சி முழுமையான வெற்றி பெறப் பின்னணியில் நின்று உழைத்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று புக்குட் குளுகூர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் கூறினார்.

0 Comments
No comments yet. Be the first to comment.