மலேசியத் திரைப்பட மற்றும் அனிமேஷன் துறையின் மாபெரும் வெற்றி: உலக அரங்கில் சாதனை!
உள்நாட்டுத் திரைப்படங்கள், உலகளாவிய கவனம் ஈர்க்கும் அனிமேஷன் படைப்புகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளால் மலேசியாவின் படைப்பாக்கத் துறை (Creative Industry) மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கும் பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது.
மலேசியாவின் படைப்பாக்கத் துறை தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் மாபெரும் வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஃபினாஸ் (Finas) தரவுகளின்படி, சமீபத்தில் வெளியான 17 உள்நாட்டுத் திரைப்படங்கள் சுமார் RM129.86 மில்லியன் வசூலைக் குவித்துச் சாதனை படைத்துள்ளன.
குறிப்பாக, 'பாப்பா சோலா தி மூவி' (Papa Zola The Movie), 'மெக்காமேட்டோ' (Mechamato) மற்றும் 'உபின் & இபின்' (Upin & Ipin) போன்ற அனிமேஷன் படைப்புகள் மலேசியாவில் மட்டுமின்றி, தென்கிழக்காசிய நாடுகள் முழுவதிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேபோல, 'மாட் கிலாவ்' (Mat Kilau) மற்றும் 'ஷெரிஃப்' (Sheriff) போன்ற திரைப்படங்கள் மலேசியர்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை உலகிற்குக் கொண்டு செல்வதோடு, கணிசமான வருமானத்தையும் ஈட்டித் தந்து நாட்டின் திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளன.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், சர்வதேசப் படப்பிடிப்புகளுக்கான முக்கியத் தளமாக மாறுவதிலும் மலேசியா வெற்றி கண்டுள்ளது. 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 'லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்' (Lord of the Flies), 'தண்டர்போல்ட்ஸ்' (Thunderbolts) உள்ளிட்ட 175 வெளிநாட்டுப் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடைபெற்றுள்ளன. 'ஃபிலிம் இன் மலேசியா' ஊக்கத்தொகை (FIMI) திட்டம் மூலம் கடந்த சில ஆண்டுகளில் RM2.75 பில்லியன் மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 31,050 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், ஹஸ்ப்ரோ (Hasbro) போன்ற சர்வதேச நிறுவனங்களுடனான கூட்டு முயற்சிகள் மூலம் உள்ளூர் கலைஞர்களுக்கு உயர் திறன் வேலைவாய்ப்புகளும், தொழில்நுட்பப் பரிமாற்றங்களும் கிடைத்துள்ளன. நாட்டின் பொருளாதாரத்தில் (GDP) படைப்பாக்கத் துறையின் பங்களிப்பு அளப்பரியது.
2024-ஆம் ஆண்டில் மட்டும் இத்துறை மலேசியப் பொருளாதாரத்தில் RM130.7 பில்லியனைப் பங்களித்துள்ளதுடன், 7,63,100 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. மைக்கிரியேட்டிவ் வென்ச்சர்ஸ் (MyCV) மற்றும் 'கெம்பாரா ரியோ' (Kembara RIUH) போன்ற அரசாங்க முயற்சிகள் மூலம் உள்நாட்டுத் தொழில்முனைவோர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
இதற்குச் சிறந்த உதாரணமாக, 'Zeve' எனப்படும் உள்ளூர் காலணி மற்றும் ஆடை நிறுவனம், MyCV நிதியுதவியுடன் தனது மாதாந்திர விற்பனையை RM30,000-லிருந்து RM1.1 மில்லியனாக உயர்த்தி, தனது ஊழியர்களின் எண்ணிக்கையையும் பன்மடங்கு அதிகரித்துச் சாதனை படைத்துள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.