மலேசியாவில் 10 ஆண்டு பாஸ்போர்ட்டுக்கு இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்!
மலேசியாவில் 10 ஆண்டு கால அவகாசம் கொண்ட பாஸ்போர்ட்டுகளைப் பெற நவம்பர் 2 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வசதி மற்றும் தேவைக்கேற்ப 5 அல்லது 10 ஆண்டு பாஸ்போர்ட்டுகளைத் தேர்ந்தெடுக்க இந்த புதிய வசதி வழிவகுக்கிறது.
மலேசிய குடிவரவுத் துறை, 10 ஆண்டு கால அவகாசம் கொண்ட பாஸ்போர்ட்டுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பச் சேவையை நவம்பர் 2, திங்கள்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதுவரை 5 ஆண்டு பாஸ்போர்ட்டுகளுக்கு மட்டுமே ஆன்லைன் வசதி இருந்த நிலையில், மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்த புதிய வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகங்களிலும் இந்த புதிய சிஸ்டம் சீராகச் செயல்படுவது உறுதி செய்யப்பட்ட பின்னரே இந்த விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
புதிய நடைமுறையின்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள் தங்களின் தேவைக்கேற்ப 5 ஆண்டு அல்லது 10 ஆண்டு பாஸ்போர்ட்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம். 10 ஆண்டு பாஸ்போர்ட்டிற்கான கட்டணம் RM350 ஆகவும், வழமையான 5 ஆண்டு பாஸ்போர்ட்டிற்கான கட்டணம் RM200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கட்டணம் செலுத்திய சுமார் ஒரு மணி நேரத்திலேயே புதிய பாஸ்போர்ட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
அதேசமயம், ஆறு மாதங்களுக்கும் மேல் செல்லுபடியாகும் பழைய பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள், தற்போதைக்கு அவற்றையே தங்களின் பயணங்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என நினைவூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாஸ்போர்ட்டுகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 627,142 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன;
இதில் 85,148 பாஸ்போர்ட்டுகள் 10 ஆண்டு கால அவகாசம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய இந்த பாஸ்போர்ட்டுகள், மலேசிய பாஸ்போர்ட்டின் உலகளாவிய மதிப்பைத் தக்கவைக்கும் வகையிலும், தேசிய அடையாள ஆவணங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையிலும் அரசின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

0 Comments
No comments yet. Be the first to comment.