இளம் அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கான சவால் - 2026 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 7 குழுக்கள் பங்கேற்பு!
பினாங்கு மாநில ஸ்ரீ முருகன் நிலையம் (SMC) ஏற்பாட்டில், "புத்தாக்கம் செய், உருவாக்கு, உருமாற்று" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான 'இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான சவால் - 2026' போட்டி கோலாகலமாக நடத்தப்பட்டது.
பாயான் லெப்பாஸ், பினாங்கு தொழில்நுட்ப முன்னேற்றக் கல்லூரி அரங்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இப்போட்டியில், 7 மாணவர் குழுக்களைச் சேர்ந்த மொத்தம் 28 மாணவர்கள் பங்கேற்றுத் தங்களது புத்தாக்கப் படைப்புகளைப் பார்வைக்கு வைத்து, அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விளக்கினர்.
இந்நிகழ்ச்சிக்குத் தமிழ்ப் பள்ளிகளிலிருந்து சுமார் 200 மாணவர்கள் வருகை தந்து பார்வையிட்டனர்.
புத்தாக்கப் படைப்புகளும் மாணவர்களின் திறமையும்
தமிழ்ப் பள்ளி மாணவர்களின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது.
இதில் மாணவர்கள் கீழ்க்கண்ட நவீன அறிவியல் புத்தாக்கக் கருவிகளை நீதிபதிகள் மற்றும் பார்வையாளர்கள் முன்பு வெற்றிகரமாகப் பரிசோதித்துக் காட்டினர்.
நதிநீர் மாசுபடுதலைக் கண்டறிதலும் அதைத் தூய்மைப்படுத்துதலும்,பார்வையற்றோருக்கான நவீன தட வழிகாட்டி சாதனம்,
நவீன மறுசுழற்சி அமைப்பு
பள்ளி வழிகாட்டி, உதவி ரோபோட்டிக் கருவி
உயிரியல் கலப்புத் தொட்டி,
அறிவார்ந்த தோட்ட நீர்ப்பாசன முறை மற்றும் கண்காணிப்பு அமைப்பு
நதி மாசுபடுதலைக் கண்காணிக்கும் கருவி என்று உருவாக்கி சாதனைப் படைத்தனர்.
இந்த அறிவியல் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் (SMC) இணை இயக்குநருமான டாக்டர் சுமதி ஜெயபாலன் வரவேற்புரையாற்றுகையில், தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் நாட்டின் புதிய இளம் தலைவர்களாக உருவெடுக்கிறார்கள் என்றார்.
பினாங்கு தொழில்நுட்ப முன்னேற்றக் கல்லூரியின் தலைமைச் செயல் அலுவலர் டத்தோ டாக்டர் ஹரி நாராயணன் தமது உரையில், அறிவியல் துறை சார்ந்த நவீனக் கண்டுபிடிப்புகளுக்கு நமது அரசாங்கம் உதவி வருகிறது. தமிழ்ப் பள்ளிகளிலிருந்து அறிவியல் தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் நிறைய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன எனத் தெரிவித்தார்.
டாக்டர் ஈசுகாசினி தமது சிறப்புரையில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குறியீட்டு முறை (Coding) ஆகியவை இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சிறு வயதிலேயே இத்தகைய முறைகளைத் தங்கள் கண்டுபிடிப்புகளில் பயன்படுத்தித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
வெற்றியாளர்களுக்குப் பரிசுகள்
போட்டியில் சிறந்து விளங்கிய மாணவர் குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
முதல் பரிசு: பார்வையற்றவர்களுக்கான நவீன தட வழிகாட்டி சாதனத்தை உருவாக்கிய குழு.
இரண்டாம் பரிசு, நதிநீர் மாசுபடுதலைக் கண்டறியும் கருவியை உருவாக்கிய குழு.
மூன்றாம் பரிசு, நதி மாசுபடுதலைக் கண்காணிக்கும் கருவியை உருவாக்கிய குழு.
நிகழ்வில் சிறப்புப் பிரமுகராகக் கலந்துகொண்ட 'மல்லியா பேக்கரி' தொழிலதிபர் மரியதாஸ் கோபால் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கிச் சிறப்பித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழ்ப் பள்ளி மாணவர்களின் புத்தாக்கப் படைப்புகள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆரம்பப் பள்ளியிலேயே அவர்களின் அறிவியல் சிந்தனை உச்ச நிலையில் உள்ளது. இவர்கள்தான் நம் இனத்தின் பெருமையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பெங்கியூன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் மூத்த தயாரிப்பு நிர்வாகி சரவணசிவம் கணேசன், SMC திறமை முன்னேற்றத்துறைப் பேராசிரியர் டாக்டர் ஆர். நாதன் ராமன், ஜபில் மலேசியா நிர்வாகி கே. தவசீலன், பினாங்கு மாநில மலேசியா இந்து சங்கத் தலைவர் விவேகரத்னா தர்மன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.