காற்றின் நன்மதிப்பே... கானக்குயிலின் நாதமே! இசைக்குயில் எஸ். ஜானகி – காலத்தால் அழியாத குரலின் இசைக் காவியம்
தமிழ் இசை உலகின் பொற்காலத்தை தனது இனிமையான குரலால் அலங்கரித்த இசைக்குயில் எஸ். ஜானகி, ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்திருக்கும் இசைச் சின்னமாக விளங்கினார். காதல், தாலாட்டு, பக்தி, சோகம் என அனைத்து உணர்வுகளுக்கும் உயிர் கொடுத்த அவரது பாடல்கள் தலைமுறைகளைத் தாண்டி இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இசை இருக்கும் வரை எஸ். ஜானகியின் குரலும் புகழும் என்றும் அழியாமல் வாழ்ந்துகொண்டே இருக்கும்.
ஒரு தாயின் தாலாட்டிலும், காதலர்களின் தவிப்பிலும், பக்தியின் உருக்கத்திலும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் உணர்வுகளோடு கலந்திருந்த ஒரு குரல் உண்டென்றால், அது 'இசைக்குயில்' எஸ்.ஜானகி அம்மா அவர்களின் குரல் மட்டும்தான்.
மொழிகளைக் கடந்து, தேசங்களைக் கடந்து, தலைமுறைகளைத் தாண்டி இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த மகா குரலுக்கு வார்த்தைகளால் நாம் செய்யும் நன்றியறிதல் இது.
பிறப்பும் இசைத்துளிர் தொடக்கமும்
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற கிராமத்தில் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் ஸ்ரீராமமூர்த்தி - ராகவம்மா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார் ஜானகி.
சிறு வயது முதலே இசையின் மீது தீராத பற்றுக் கொண்ட இவர், நாதஸ்வர வித்வான் பைடிசுவாமி என்பவரிடம் முறைப்படி இசை பயின்றார்.
1957 ஆம் ஆண்டு 'விதியின் விளையாட்டு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பாடகியாகத் தனது கணீரென்ற குரலால் காலடி எடுத்து வைத்தார். அன்று முதல், தென்னகத்து இசை ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
தமிழ் நெஞ்சங்களை உருகவைத்த அழியாப் பாடல்கள்,
பாடல்களுக்கு உயிர் கொடுப்பதில் ஜானகி அம்மா ஒரு வித்தைக்காரர்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எனப் பல தலைமுறை இசையமைப்பாளர்களின் கற்பனைக்கு வடிவம் கொடுத்தவர். தமிழில் அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்களில் சில முத்திரைப் பாடல்கள்,
தாலாட்டுப் பாடல்கள், கேட்பவரின் இதயங்ககை வருடுவதோடு அல்லாமல், இதயத்தை கனக்க வைக்கும் என்றால் அது மிகையாகாது. எஸ்.ஜானகியின் குரல் வளத்திற்கு ஆகச்சிறந்த சான்று என்றாக் 'மலரே பேசுமௌனமே' (பிள்ளையோ பிள்ளை).
காதல் & மெல்லிசை: 'செந்தூரப் பூவே' (16 வயதினிலே), காற்றில் எந்தன் கீதம் (ஜானி), அமுதே தமிழே அழகிய மொழியே' (கோவில் புறா), சுந்தரி கண்ணால் ஒரு சேதி' (தளபதி).
கொஞ்சும் மழலைக் குரலாக, சின்னச் சின்ன வண்ணக்குயில் (மௌன ராகம்) என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
தேடி வந்த தேசிய விருதுகள்
ஜானகி அம்மாவின் அசாத்திய குரல் திறமைக்காக இந்திய அரசு அவரைப் பலமுறை தேசிய விருதுகளால் கௌரவித்துள்ளது. அவர் பெற்ற நான்கு தேசிய விருதுகள்.
1977 செந்தூரப் பூவே, 16 வயதினிலே தமிழ்
1992 இஞ்சி இடுப்பழகி தேவர் மகன்
2013 ஆம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு வழங்கிய 'பத்மபூஷன்' விருதை, "தென்னகக் கலைஞர்களுக்குத் தாமதமாக வழங்கப்படும் அங்கீகாரம் எனக் கூறி, தனது ரசிகர்களின் குரலாக மாறி அதை அன்போடு மறுத்தார்.
எல்லையைக் கடந்த இசைப் பயணம் (அனைத்துலக நிகழ்ச்சிகள்)
தமிழ்நாடு மற்றும் இந்திய மாநிலங்களைத் தாண்டி, உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்காகவும், இசை இரசிகர்களுக்காகவும் எஸ்.ஜானகி பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்.
தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கைக்குப் பலமுறை சென்று, அங்குள்ள வானொலி மற்றும் பிரம்மாண்ட மேடைகளில் பாடி அந்நாட்டு மக்களின் அன்பைப் பெற்றார்.
மலேசியா மற்றும் சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று, அங்கு நடைபெற்ற கலை விழாக்களிலும், நட்சத்திரக் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுத் தன் குரலால் அரங்கம் நிறைந்த கைதட்டல்களைப் பெற்றார்.
அமெரிக்கா (USA) மற்றும் ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக லண்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் வசிக்கும் உலகத் தமிழர்களுக்காகப் பல இசை நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்து, மேற்கத்திய மண்ணிலும் நம் நாட்டு இசையின் பெருமையை நிலைநாட்டினார்.
இன்றும் என்றும் வாழும் கானக்குயில்
எஸ்.ஜானகி அவர்கள் 2016 ஆம் ஆண்டு, "நான் பாட வந்த நோக்கத்தை நிறைவு செய்துவிட்டேன்" என்று கூறி, திரைப்படப் பாடல்கள் பாடுவதில் இருந்து ஓய்வு பெற்றார்.
அவர் நம்மை விட்டு எங்கும் செல்லவில்லை காற்றோடு காற்றாக, நாம் கேட்கும் ஒவ்வொரு பாடலின் வழியிலும், தாயின் தாலாட்டிலும், காதலின் மெல்லிய தவிப்பிலும் எந்நாளும் வாழ்ந்துகொண்டே தான் இருப்பார். இசைக்குயில் ஜானகி அம்மாவின் குரல் உள்ளவரை, இந்த பூமியில் இசைக்கு மரணமே இல்லை! உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என் உள்ளம் எங்கும் அள்ளித் தெளித்தேன் என்றால் அது எஸ்.ஜானகியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும். பல முறை ஜானகி அம்மா மறைந்தார் என்ற செய்தி சமூக ஊடகத்தில் பரவினாலும், இன்று அது உண்மையானது உலக மக்கள் கண்களிகளில் கண்ணீர் முட்டுகிறது. என்றும் வாழ்க உங்கள் புகழ். உங்கள் குரலுக்காக ஏங்குத் தவிக்கும் நான். - செ.குணாளன்

0 Comments
No comments yet. Be the first to comment.